தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு
ADDED : மே 26, 2025 02:00 PM

சென்னை: தென்மேற்கு பருவமழையையொட்டி சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்மை மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எந்நேரமும் பெய்யும் கனமழையினால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. குறிப்பாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீலகிரியில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் இருப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு மற்றும் பேரிடர் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையையொட்டி சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
* மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்
* மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் போதுமான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
* போதிய அளவில் எரிபொருள் இருப்புடன் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்
* மின்வெட்டு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்காத வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
* நிவாரண முகாம்களில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்
* முகாம்களில் சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
* அதிக ஆபத்து இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் விரைவு மீட்புக் குழுக்களின் உதவியுடன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
* வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் கர்ப்பிணிகள் பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
*வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்
* திடக்கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகளை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்
* பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டால், உடல்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.