ஆதிதிராவிடர் நலத்துறை சமையலர்கள் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை
ஆதிதிராவிடர் நலத்துறை சமையலர்கள் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை
ADDED : ஜூன் 14, 2025 11:02 PM
சென்னை:சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை சமையலர்கள் 80 பேரின் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் காலியாக இருந்த, 80 சமையலர் பணிகளுக்கான அறிவிப்பு, 2015 அக்., 21ல், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே, காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டிருந்தது. பின், தேர்வானவர்கள் சமையலராக நியமிக்கப்பட்டனர்.
'இந்த நியமனம் தன்னிச்சையானது; சட்டவிரோதமானது' என கூறி, சேலத்தை சேர்ந்த சதாசிவம், ஆறுமுகம் உட்பட நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2016ல் வழக்கு தொடந்தனர். மனுவில், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களான நாங்கள், சமையலர் என்பதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளோம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பணி வாய்ப்புக்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்து, 1986ம் ஆண்டு வெளியிட்ட அரசு உத்தரவை பின்பற்றி, அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரசு உத்தரவு கூட, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால், அவர்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என கூறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இட ஒதுக்கீட்டை பின்பற்றி, புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என, கடந்தாண்டு ஜூலை 22ல் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சமையலர்கள் 80 பேருக்கும், நீதிமன்ற உத்தரவு படி, தங்களை ஏன் பணியில் இருந்து நீக்கம் செய்யக் கூடாது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின், மாவட்ட நிர்வாகம், 80 சமையலர்களையும் பணி நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து, சேலத்தைச் சேர்ந்த சமையலர்கள் ராணி, கலா உட்பட ஐந்து பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், வழக்கறிஞர் ரமேஷ் பிரபு ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை செயலர், இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

