புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் மட்டும் நியமனம் செய்தால் போதுமா: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் மட்டும் நியமனம் செய்தால் போதுமா: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
ADDED : ஜூன் 14, 2025 11:44 AM

சென்னை: 'தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது எந்த வகையில் நியாயம்? ஓர் ஆசிரியரைக் கொண்டு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?', என்று தமிழக அரசுக்கு பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
குறைந்தபட்ச தேவை
அவரது அறிக்கை; தமிழகத்தில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் துறைகளில் முதல்கட்டமாக 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழகத்தில் உள்ள 57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 203 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அப்படிப்புகளில் 10,396 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 43 கல்லூரிகளில் 49 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் 2,950 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 100 கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றில் 13, 346 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு ஒரு படிப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் 252 ஆசிரியர்களை மட்டுமே நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. அவர்கள் கூட நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மாதம் ரூ.25,000 மட்டுமே ஊதியம் பெறும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆவர்.
போதுமானதல்ல
இவை தவிர, 29 அரசு கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள 173 படிப்புகளில் 2008 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்காக ஒரே ஒரு ஆசிரியர் கூட கூடுதலாக நியமிக்கப் படவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்படுவது தான் தரமானக் கல்வி வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல.
கத்தரிக்காய் பேரம்
புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைத்த கல்லூரிக் கல்வி ஆணையரகம், 252 புதிய பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து 558 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும்; அவர்களின் ஊதியத்திற்காக ரூ.13.95 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத உயர்கல்வித்துறை, கல்லூரிக் கல்வி ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக ரூ.6.30 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.
கல்லூரி ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக அரசு ஒதுக்கீடு செய்கிறது என்றால், உயர்கல்வி வழங்குவதை கத்தரிக்காயை பேரம் பேசி வாங்குவதைப் போல நினைக்கிறதா? என்ற ஐயம் தான் எழுதுகிறது. இது உயர்கல்வியை இழிவுபடுத்தும் செயலாகும்.
கேள்விக்குறி
அண்மையில் தமிழகத்தில் 11 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு கல்லூரியிலும் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, அவற்றை நடத்துவதற்காக தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் ஆணையிட்டுள்ளது.
புதிய கல்லூரிகளில் ஒரு பாடப்பிரிவுக்கு தலா 2 ஆசிரியர்களுக்கும் கூடுதலாக நியமிக்கும் தமிழக அரசு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மட்டும் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது எந்த வகையில் நியாயம்? ஓர் ஆசிரியரைக் கொண்டு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.