ஆம்னி பஸ் 'பர்மிட்' வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்; தமிழகத்தில் மட்டும் ஆறு மாதமா? தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார்
ஆம்னி பஸ் 'பர்மிட்' வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்; தமிழகத்தில் மட்டும் ஆறு மாதமா? தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார்
ADDED : செப் 14, 2025 01:36 AM

சென்னை: தனியார் ஆம்னி பஸ்களை பதிவு செய்வது, 'பர்மிட்' புதுப்பிப்பு, உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பெற, இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
சென்னையில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல மாவட்டங்களில், 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், தனியார் பஸ்களுக்கான பதிவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை, தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், உடனுக்குடன் வழங்குவதில்லை; இன்னும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
ஒரு பஸ்சை புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றால், போக்குவரத்து ஆணையரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து, வாகன ஆய்வாளர், விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு வந்து ஆய்வு செய்கிறார்.
அதன்பின், ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
அதற்கான அறிக்கை, வட்டார போக்குவரத்து அதிகாரி வாயிலாக, துணை அல்லது இணை ஆணையர் அலுவலகங்களுக்கு செல்கிறது. இறுதியாக, ஆணையரகத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை சரியாக செய்தாலே ஒரு வாரம் போதும்.
ஆனால், ஒரு பஸ்சை புதிதாக பதிவு செய்வதற்கு இரண்டு மாதங்களாகி விடுகிறது. இதேபோல, ஏற்கனவே உள்ள ஆவணங்களை சரிபார்த்து, பர்மிட் புதுப்பிப்பதற்கும், மீண்டும் பழைய முறையையே பின்பற்றி தாமதம் செய்கின்றனர்.
உரிமையாளர்கள் பெயர் மாற்றத்துக்கு, ஆறு மாதங்கள் வரை தாமதம் ஏற்படுத்துகின்றனர்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில், ஆதார் அட்டையுடன் கூடிய, 'பயோமெட்ரிக்' முறையை அமல்படுத்தி, இதுபோன்ற சேவைகள், ஆவணங்களை, அதிகபட்சமாக மூன்று நாட்களில் வழங்குகின்றனர். தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சீரான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

