'வள்ளலார் சர்வதேச மையத்தால் ஜோதி தரிசனம் தடைபடாது!'
'வள்ளலார் சர்வதேச மையத்தால் ஜோதி தரிசனம் தடைபடாது!'
ADDED : பிப் 25, 2024 01:05 AM
சென்னை:''சர்வதேச மையத்திற்கான எதிர்ப்பு என்பது, வள்ளலாரின் பெருமைகளை உயர்த்தி பிடித்தவர் என்ற வரலாறு முதல்வருக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான்,'' என, அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
அரசு பணியாளர் தேர்வாணையத்தால், கோவில் செயல் அலுவலர் பணிக்கு தேர்வான, 75 பேருக்கு, அமைச்சர், நியமன உத்தரவுகளை வழங்கினார். பின், அவர் கூறியதாவது:
வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க, சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற, ஏழு நிறுவனங்களில் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அதன்பின், கடலுார் மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, 100 கோடி ரூபாயில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வள்ளலார் சர்வதேச மையம் தற்போதைய வடிவமைப்பின்படி அமைக்கப்பட்டால், ஜோதி தரிசனத்திற்கு இடையூறு ஏற்படும் என, ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுவதால், நிச்சயமாக ஜோதி தரிசனத்திற்கு இடையூறு இருக்காது. இம்மையம், தியான மண்டபம், அருங்காட்சியகம், பாடசாலை, வைத்திய சாலை, யோகசாலை, கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. வள்ளலார் சர்வதேச மையத்தின் காட்சி வடிவமைப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.