'நீட்' தேர்வு தோல்வி அடைந்தோருக்கு மனநல ஆலோசனை இன்று துவக்கம்
'நீட்' தேர்வு தோல்வி அடைந்தோருக்கு மனநல ஆலோசனை இன்று துவக்கம்
ADDED : ஜூன் 16, 2025 05:16 AM

கோவை: 'நீட்' தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் திட்டம், சென்னையில் இன்று துவங்குகிறது.
கோவை அரசு மருத்துவமனையில், பல்வேறு திட்டங்களை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நான்கு ஆண்டுகளில், 414.13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. நாட்டில், 15 பெண்களில் ஒருவருக்கு, கருவுறுதல் பிரச்னை உள்ளது.
கோவை அரசு மருத்துவ மனையில் முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், 16.30 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில், 180 பெண்கள் பரிசோதிக்கப்பட்டு இருவர் கருவுற்றுள்ளனர்.
நீட் விலக்கு கோரி, அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வில் முதல் 100 மதிப்பெண்ணில், ஆறு பேர் தமிழகத்தில் உள்ளனர்.
நீட் தேர்வில் தவறிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை, தொலைபேசி எண், 104 வாயிலாக வழங்கப்படும். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இதுவரை, 32,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விரைவில் கவுன்சிலிங் நடக்க உள்ளது.
மருத்துவ துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 29,000 பேர் எம்.ஆர்.பி., வாயிலாக நியமனம் செய்யப்பட்டனர். நீட் மதிப்பெண்களில் குளறுபடி இருப்பதாக கூறப்படுவது குறித்து, சுகாதார துறை செயலர் வாயிலாக, தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.