ராம ராஜ்யத்தை கொடுப்பவர் மோடி பா.ஜ., அண்ணாமலை பேச்சு
ராம ராஜ்யத்தை கொடுப்பவர் மோடி பா.ஜ., அண்ணாமலை பேச்சு
ADDED : ஜன 26, 2024 02:44 AM
பெண்ணாடம்:'மக்களை முன்னிலைப்படுத்தும் ராம ராஜ்யத்தை கொடுப்பவர் நம் பிரதமர் மோடி' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கடலுார் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அவர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். குடும்ப ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் வளர்ச்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார் நம் பிரதமர். 2024ல் பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பு வந்துள்ளது.
திசை தெரியாமல் காங்., ராகுல் சுற்றுகிறார். இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார். அவர்களால் நல்லாட்சி தர முடியுமா? பிரதமர் மோடியின் கரங்களை வாக்காளர்கள் வலுப்படுத்த வேண்டும்.
ராமர் வடநாட்டிற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. நமக்கும் சொந்தக்காரர். ராமர் மனிதராக தோன்றி, மனிதராக துன்புற்று ஆட்சி புரிந்தவர்.
மக்களை முன்னிலைப்படுத்தி ஆட்சி செய்வதே ராம ராஜ்ஜியம். இதை தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். பிரதமர் மோடி, முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை. எட்டு முஸ்லிம் நாடுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன.
ஏழைகளுக்காக கட்சி ஆரம்பித்த திருமாவளவன், இன்று ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி துதி பாடுகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

