'லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதே என் வேலை!'
'லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதே என் வேலை!'
ADDED : ஜன 09, 2024 10:30 PM
சென்னை:''தமிழகத்தில் பா.ஜ.,வை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும். இதுதான் என் அதிகாரத்திற்கு உட்பட்டது; கூட்டணி தொடர்பான அறிவிப்பை, பா.ஜ., பார்லிமென்ட் குழு தான் முடிவெடுத்து அறிவிக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நாங்கள், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம்.
குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு, மூன்று நாட்கள் நடக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாகவே, அம்மாநிலம், 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
எனவே, தமிழக அரசு இன்னும் இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். அதானி நிறுவனம், மோடியின் சொத்து, பா.ஜ.,வுக்கும்; அதானிக்கும் தொடர்பு இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
முதலீட்டாளர் மாநாட்டில், அதானி குழுமத்திடம் இருந்து, 42,768 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. இதை தி.மு.க., அமைச்சர்கள் பாராட்டுகின்றனர்.
கூட்டணி தொடர்பான அறிவிப்பை, பா.ஜ., பார்லிமென்ட் குழு தான் அறிவிக்கும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். மாநில கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி தொடர்பாக எங்களிடம் பேசலாம்.
பா.ஜ.,வை பொறுத்தவரை பிரதமர் மோடியை ஏற்று கொண்டவர்கள் எங்களுடன் பயணிக்கலாம். பா.ஜ.,வில் தேர்தல் தொடர்பாக இன்னும் பேசவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில், எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பாகவும், பார்லிமென்ட் கமிட்டி தான் முடிவெடுத்து அறிவிக்கும். கூட்டணி குறித்து பேச, எனக்கு அதிகாரம் இல்லை.
பா.ஜ.,வை தயார்படுத்த வேண்டும். இப்போதைக்கு இது தான் என் வேலை. இதுதான் என் அதிகாரத்திற்கு உட்பட்டது.
தமிழகத்தில் யாரும் ஆட்டு மந்தைகள் கிடையாது. ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அப்படியே நம்மிடம் வருவர் என்று நினைத்தால் தவறு. பிரதமர் மோடி, இதுவரை யாருக்கும் புகழ் அஞ்சலி கடிதம் எழுதியதில்லை.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு மட்டும் கடிதம் எழுதியுள்ளார். இது, அவரின் வெள்ளை மனதிற்காகதான். அதில் அரசியல் கண்ணோட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

