கோடையிலும் சீரான குடிநீர் அதிகாரிகளுக்கு நேரு உத்தரவு
கோடையிலும் சீரான குடிநீர் அதிகாரிகளுக்கு நேரு உத்தரவு
ADDED : பிப் 29, 2024 11:08 PM
சென்னை:''கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கோடை காலத்திலும் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சென்னை குடிநீர் வாரியத்தில், கோடைக்கால சூழலை சமாளிப்பதற்கான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
எல்லா இடங்களிலும் குடிநீர் வினியோகம் சீராக உள்ளதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கோடைக்காலம் நெருங்குவதால், ஒவ்வொரு இடத்திலும் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு, அனைத்து இடங்களிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார்கள், பைப்கள் பழுதடைந்திருந்தால், அவை சரி செய்யப்படும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சீரான குடிநீர் வினியோகம் வழங்குவதை,சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தினந்தோறும் ஆய்வறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களில் பயன் பெறும் மக்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீரை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

