மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க விரைவில் புது இணையதளம் துவக்கம்
மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க விரைவில் புது இணையதளம் துவக்கம்
ADDED : ஜூன் 16, 2025 06:27 AM
சென்னை : தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் பெற http://www.tnlayoutreg.in/ என்ற இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், அங்கீகாரமில்லாத தனிமனைகள் வரன்முறைக்கு நிர்ணயித்திருந்த காலக்கெடுவை நீக்கி, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, விண்ணப்பங்களை பதிவு செய்ய, பொதுமக்கள் இணையதளத்தை அணுகினர். ஆனால், அதில் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை.
டி.டி.சி.பி., உயரதிகாரியை கேட்டபோது, அவர் கூறியதாவது:
மனைகள் வரன்முறைக்கு விண்ணப்பங்கள் பெற, 2017ல் உருவாக்கப்பட்ட இணையதளமே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில், பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அதற்கு மாற்றாக, புதிய இணையதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
பொதுமக்கள் தங்கள் மனை குறித்த விபரங்களை எளிதாகவும், விரைவாகவும் பதிவு செய்யும் வகையில், அதில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அதிகாரிகள் நிலையில், மனை குறித்த விபரங்களை விரைவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப அனுமதி வழங்க வசதிகள் செய்யப்பட உள்ளன. புதிய இணையதளம் உருவாக்கும் பணி, இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த சில நாட்களில் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.