இந்திய விண்வெளி சாதனையை யாராலும் உடைக்க முடியாது: இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
இந்திய விண்வெளி சாதனையை யாராலும் உடைக்க முடியாது: இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
ADDED : செப் 18, 2025 11:44 PM

கோவை: நேரு கல்வி குழுமம் சார்பில் தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்பாளர் மாநாடு-2025, கோவை அருகே திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,000 'ஸ்டார்ட் அப்' நிறுவன கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், 35க்கும் மேற்பட்ட திட்டங்கள் கவனத்தை ஈர்த்தன.
இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், ''ஒரு நாட்டின் முன்னேற்றம் புதுமையான படைப்புகளை படைப்பதில் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில், மற்ற நாடுகளை சார்ந்து செயல்பட்டோம். தற்போது வளர்ந்த நாடுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இதை வரும், 50 ஆண்டுகளுக்கு யாராலும் உடைக்க முடியாது. அமெரிக்காவின் தொடர்புத்துறைக்கான சேட்டிலைட், நமது ராக்கெட் மூலம் விரைவில் அனுப்பப்பட உள்ளது. நாடு சுதந்திரம் பெறும் முன், 97.5 சதவீத மக்க ள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தனர். இவர்களது சராசரி ஆயுள் காலம் 32. 50 ஆண்டுகளில் அந்த சராசரி, 71 ஆக உயர்ந்துள்ளது. வெண்மை புரட்சி, நீல புரட்சி என அனைத்திலும் நாம் வளர்ந்துள்ளோம். கல்வி ஒன்றே நமக்கு வளர்ச்சியை தரும்,'' என்றார்.
மேஜிக் மைனா, பைன் டெக் ஆகிய நிறுவனங்களுடன், நேரு கல்வி குழுமம் சார்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. நேரு கல்வி குழும நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணகுமார், டில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த ரவீந்தர் கவுர், நேரு கல்வி குழும கல்வி மற்றும் நிர்வாக செயல் இயக்குனர் நாகராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நேரு கல்வி குழும தொழில்நுட்ப வணிக காப்பக இயக்குனர் தலைவர் வைகுண்ட செல்வம் செய்திருந்தார்.