பழனிசாமி, விஜய் மட்டுமா; வடிவேலுக்கும் கூட்டம் வருகிறது: சொல்கிறார் திருமாவளவன்
பழனிசாமி, விஜய் மட்டுமா; வடிவேலுக்கும் கூட்டம் வருகிறது: சொல்கிறார் திருமாவளவன்
ADDED : செப் 14, 2025 07:40 AM

கோவை: ''நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்குச் சென்றால் கூட்டம் கூடுகிறது. கூட்டம் கூடுவதை வைத்து தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: விஜய் தற்போது தான், களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். தி.மு.க., தலைமையிலான கூட்டணி மட்டுமே முழு உருவம் பெற்று வலுவாக உள்ளது. 2016-17ல் உருவான இக்கூட்டணி, பல தேர்தல்களில் வென்றுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த அணியை வீழ்த்த பல முனைகளில் இருந்து ஒலிக்கும் குரல்களில் விஜய் குரலும் ஒன்று. மற்றொன்று அ.தி.மு.க., அதனுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ., இவர்கள் அனைவரும் தனித்தனியே தேர்தலை சந்திக்கப் போகின்றனர்.
ஒரு அணியாக வடிவம் பெறவில்லை. தி.மு.க., கூட்டணியை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு, விஜய் வரவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி செல்லும் இடங்களிலும் ஏராளமான மக்கள் திரள்கின்றனர். மக்கள் திரள்வது அளவுகோல் அல்ல. அதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதை வைத்து ஒரு முடிவை கூற முடியாது.
நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்கு சென்று நிகழ்ச்சி நடத்தினால், லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். கூட்டத்தை வைத்து, அதுவே தேர்தல் முடிவாக இருக்கும் என கருத முடியாது. கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., அரசு அனைத்து தரப்பினருக்கும் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இக்கூட்டணிக்கு மாற்றாக, ஒற்றைக்கட்சி, தனி கட்சி வெற்றி பெற்று விடும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.