
ஜனவரி 26, 1956
கேரள மாநிலம், பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட, சந்திரமவுலி - சாந்தா தம்பதிக்கு மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் பி.சி.ஸ்ரீராம்.
இவர், சென்னை மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் படித்தார். இவரது தாத்தா பி.ஆர்.சுந்தரம் அய்யர், ஒரு பிரவ்னி கேமராவை பரிசளித்தார். அதில் படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்ததால், படிப்பில் ஆர்வம் குறைந்தது.
சென்னை திரைப்பட கல்லுாரியில், ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தவர், கமல், மணிரத்னம், ருத்ரய்யா, ஆர்.சி.சக்தி உள்ளிட்டோருடன், தரமான சினிமா எடுப்பது குறித்து அடிக்கடி விவாதித்தார். இவர், வா இந்த பக்கம் என்ற படத்தில் ஒளிப்பதிவாளரானார். மவுன ராகம் திரைப்படத்தில், மணிரத்னத்துடன் இணைந்தார்.
இதே கூட்டணி, நாயகன், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் வெற்றி பெற்றது. இவர், மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய படங்களை இயக்கினார். ஒளிப்பதிவுக்காக, தேசிய விருதுகளுடன், பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ள இவர், தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
'காட்சிகளின் கலை சிற்பி' பி.சி.யின், 68வது பிறந்த தினம் இன்று!

