
ஜனவரி 27, 1946
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டியில், பொன்னுசாமி - மூக்கம்மாள் தம்பதிக்கு மகளாக, 1946ல் இதே நாளில் பிறந்தவர் விஜயலட்சுமி.
இவர், தமிழ் படித்து மதுரை மீனாட்சி கல்லுாரியில் பேராசிரியையாக இருந்தார். இவரை பெண் பார்த்த அமெரிக்க மாப்பிள்ளை, 'வெறும் தமிழையா படித்தீர்கள்?' எனக் கேட்டதால், அவரை நிராகரித்து, தமிழ் பேராசிரியரை மணக்க உறுதியேற்று, மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்ப்பேராசிரியர் நவநீதகிருஷ்ணனை மணந்தார். இருவரும், மதுரை காமராஜர் பல்கலையில் நாட்டுப்புறக் கலை மையத்தில் பேராசிரியர்களாயினர்.
பாட்டு, நடனம், இசையில் திறமையான இவர், தன் கணவருடன் மலைவாழ், கிராமப்புற மக்களிடம் உள்ள இசை, நடனம், கூத்து உள்ளிட்டவற்றை ஆவணமாக்கினார். இருவரும் தாலாட்டு, ஏற்றப்பாட்டு, பாவைக்கூத்து, கோலாட்டம், இசை நாடகம் உள்ளிட்டவற்றை கோவில் திருவிழா, கருத்தரங்க மேடைகளில் அரங்கேற்றி பிரபலமாக்கினர்.
கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளனர். இவரின், 'தோட்டுக்கடை ஓரத்திலே, ஆல ஆல பிள்ளையாரே, சந்திரரே சூரியரே' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் கிராம திருவிழாக்களில் களைகட்டுகின்றன. 'நாட்டுப்புறக் கலைகளின் நாயகி'யின் 78வது பிறந்த தினம் இன்று!

