
பிப்ரவரி 24, 1948
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மேல்கோட்டையில் ஜெயராம் - வேதவல்லி தம்பதியின் மகளாக, 1948ல் இதே நாளில் பிறந்தவர் ஜெயலலிதா. தன், 2வது வயதில் தந்தையை இழந்தார். இவரது தாய், சினிமாவில் நடிக்க சென்னை வந்ததால், சர்ச் பார்க் கான்வென்டில் படித்தார்.
கல்லுாரியில் சேர்ந்த போது, வெண்ணிற ஆடை திரைப்பட வாய்ப்பு கிடைத்ததால், கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார், என்.டி.ராமாராவ், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர்களுடன், தென் மாநில மொழி படங்களில் நடித்தார்.
கடந்த, 1982ல் அ.தி.மு.க.,வில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் பொது செயலர், எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை வகித்தார். 1991ல் முதல் முறையாக முதல்வரானார். 2001, 2011, 2016 தேர்தல்களிலும் வென்று முதல்வர் ஆனார்.
'அம்மா உணவகம், தொட்டில் குழந்தை, தாலிக்கு தங்கம்' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியவர், 2016, டிசம்பர் 5ல் தன், 68வது வயதில் மறைந்தார்.
தமிழக மக்களால், 'அம்மா' என அழைக்கப்பட்டவரின் பிறந்த தினம் இன்று!

