
மார்ச் 1, 1953
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக, சென்னை, கோபாலபுரத்தில், 1953ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்டாலின்.
சோவியத் ரஷ்யாவை ஆண்ட ஜோசப் ஸ்டாலின் நினைவாக, இவருக்கு அந்த பெயரை கருணாநிதி சூட்டினார். எம்.சி.சி., பள்ளி, மாநில கல்லுாரிகளில் படித்தார். பள்ளி பருவத்தில், கோபாலபுரம் தி.மு.க., இளைஞரணியை துவங்கினார். 1973ல் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினரானார். இந்திரா கொண்டு வந்த அவசர நிலைக்கு எதிராக போராடியதால் 1976ல், 'மிசா' சட்டத்தில் கைதானார்.
கடந்த, 1982ல் தி.மு.க., இளைஞர் அணி செயலராகி, 40 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானார். 1996ல், சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வென்று, மேம்பாலங்கள், தரமான சாலை, பூங்கா வசதிகளை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகி, மகளிர் சுய உதவிக்குழு, கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தினார். 2009ல் துணை முதல்வர்; 2016ல் எதிர்க்கட்சி தலைவர்; 2021ல் முதல்வரானார்.
'மக்களை தேடி மருத்துவம், மகளிருக்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண், உரிமைத்தொகை' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவரது, 71வது பிறந்த தினம் இன்று!

