ADDED : ஜூலை 01, 2025 12:23 AM

மதுரை : ''கூட்டணி ஆட்சி கிடையாது என பழனிசாமி கூறியிருப்பது, அமித் ஷாவுக்கும், பா.ஜ.,வுக்கும் தான்,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் அமித் ஷா மட்டும் தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வருகிறார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காக்கிறார் என குறிப்பிட்டு இருந்தேன்.
தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். கூட்டணி ஆட்சி இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது என்ற விடையை பா.ஜ.,வினருக்குத் தான் கூறியிருக்கிறார்.
அதேபோல், அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கின்றனர் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இணைப்பு உள்ளதே தவிர பிணைப்பு இல்லை.
அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ஜ., விலகினால் விடுதலை சிறுத்தைகள் சேருமா என்று கேட்கப்படுகிறது. அப்படியொரு நிலை வந்தால், அது குறித்து பதில் கூறுவேன்.
பா.ம.க., ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு என்ன திடீர் பாசம் என அன்புமணி கேட்டுள்ளார். அக்கட்சி எப்படியாவது போகட்டும் என்று நான் கருதி இருந்தால், ராமதாசை சந்தித்திருக்க மாட்டேன்.
யாரோ சொல்வதை கேட்பதை விட, தந்தை சொல்வதை கேளுங்கள் என்று பொறுப்பான வார்த்தைகளைத் தான் அன்புமணிக்கு கோரிக்கையாக வைத்தேன். பசப்பான வார்த்தையாக சொல்லாமல், பிணைப்பான வார்த்தையைத் தான் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.