பங்கு பிரிப்பதில் ரோந்து போலீசார் மோதல்; இருவர் சஸ்பெண்ட்
பங்கு பிரிப்பதில் ரோந்து போலீசார் மோதல்; இருவர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 16, 2024 11:40 PM
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் -கரூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இடையே பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்களில் ஆடு, மாடுகளை ஏற்றி செல்வோர் ,கூடுதல் பாரங்களை எடுத்துச் செல்வோரிடம் ரோந்து போலீசார் லஞ்சம் பெறுவது நீண்டநாட்களாக நடந்து வருகிறது. விட்டல்நாயக்கன்பட்டி அருகே லாரியை வழி மறித்த போது விபத்தில் சிக்கி போலீஸ்காரர் காயமடைந்ததும், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் சேதமடைந்ததும் ஏற்கனவே நடந்துள்ளன. இதனால் ரோந்து போலீசார் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இருப்பினும் மாமூல் வசூல் குறையவில்லை. வேடசந்துார் - கரூர் ரோட்டில் உள்ள மினுக்கம்பட்டியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் வசூல் செய்வது தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் வசூல் பணத்தை பிரிப்பதில் டிரைவர் குருமூர்த்திக்கும் போலீஸ் அருளானந்தம் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. காயமடைந்த அருளானந்தம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வேடசந்துார் டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி எஸ்.பி., பிரதீப்புக்கு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

