ADDED : ஜன 17, 2024 03:12 AM
சென்னை : முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை துணை வேந்தர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகநாதன்; விதிகளை மீறி சொந்த மாக, தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாகவும், பல்கலை அதிகாரிகளை வைத்து அமைப்பை இயங்க செய்ததாகவும், துணை வேந்தருக்கு எதிராக, பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக, கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் புகார் அளித்தனர்.
புகாரின்படி, கருப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதனுக்கு, ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சேலம் போலீஸ் கூடுதல் கமிஷனர் தரப்பில் தாக்கல் செய்த மனு, நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜெகநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நாளை விசாரணைக்கு வருகிறது.

