ஆசிரியர் தரக்குறைவு பேச்சால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
ஆசிரியர் தரக்குறைவு பேச்சால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
UPDATED : ஜூலை 01, 2025 04:42 AM
ADDED : ஜூலை 01, 2025 12:15 AM

தஞ்சாவூர்: சக மாணவியுடன் பேசியதை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், மாதாக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் மகன் ஸ்ரீராம், 16. தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று காலை வெகு நேரமாகியும், ஸ்ரீராம் தன் அறையை விட்டு வெளியில் வரவில்லை. சீனிவாசன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மருத்துவக் கல்லுாரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்ரீராம் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'பள்ளி வகுப்பறையில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் சிம்காஸ்ராஜ், சக மாணவர்கள் முன் தரக்குறைவாக தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாணவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியரை கைது செய்ய கோஷமிட்டனர். எஸ்.பி., ராஜாராம், தமிழ் பல்கலைக்கழக போலீசார் பேச்சு நடத்தினர். பின், ஆசிரியர் சிம்காஸ்ராஜை போலீசார் கைது செய்தனர்.