பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் 'குலசாமி!' :... 'வசனம்' பேசி ஆள் சேர்க்கிறார் அன்புமணி
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் 'குலசாமி!' :... 'வசனம்' பேசி ஆள் சேர்க்கிறார் அன்புமணி
ADDED : ஜூன் 01, 2025 05:32 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தன் குலசாமி மற்றும் கொள்கை வழிகாட்டி என்ற, 'வசனம்' பேசியுள்ள அன்புமணி, இதன் வாயிலாக, தனக்கு ஆதரவாக ஆள் சேர்க்கும் பணியிலும், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்; அத்துடன், விரைவில் நடைபயணம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் தந்தை ராமதாசுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பா.ம.க., நிர்வாகிகளுடன், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதில், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது:
பா.ம.க.,வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் விரைவில் சரியாகி விடும். அதை நான் சரி செய்து விடுவேன். பொதுக்குழுவால் முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எனக்கு தான் நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு.
நியமன, நீக்க அறிவிப்பில் தலைவர் தான் கையெழுத்திட முடியும். பொதுக்குழுவையும் தலைவர் தான் கூட்ட முடியும். இங்கே வந்திருக்கும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.
உங்களை யாரும் நீக்க முடியாது. அப்படி நீக்கினால், அடுத்த 10 நிமிடங்களில், அதை சரி செய்து விடுவேன்.
மனு கொடுக்கும் நிலையில் இருக்கும் நாம், மனு வாங்கும் இடத்திற்கு மாற வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும். மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டை, வேறு கட்சிகளால் நடத்த முடியாது.
இந்த மாநாட்டின் வெற்றியால் அரசாங்கம் ஆடிப்போய் விட்டது. அந்த ஆட்டத்தால் தான் இந்தப் பிரச்னைகள். சிறிய பிரச்னையை பூதாகரமாக்கி வருகின்றனர். விமர்சனங்களை பொருட்படுத்தாமல், பா.ம.க., நிர்வாகிகள் கட்சிப் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
கட்சியை துவங்கிய ராமதாஸ், 45 ஆண்டுகளாக உழைத்திருக்கிறார். அவரது தொலைநோக்கு சிந்தனையால் வளர்ந்திருக்கிறோம். அவர் தான் நம் குலசாமி, குல தெய்வம்; கொள்கை வழிகாட்டி. தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி, இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அவரது கொள்கை வழியில் பயணிப்போம்.
புதிய உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டையை புதுப்பித்தல், கிளை நிர்வாகிகள், 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகளை, அடுத்த மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். கடந்த காலங்களில், ஒரு தொகுதியில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், அத்தொகுதியில், 65,000 ஓட்டுகள் தான் கிடைத்தன.
எனவே, குறைவாக இருந்தாலும், உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். விரைவில், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் செல்ல இருக்கிறேன். அதன் விபரங்களை அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராமதாசை குலதெய்வம், கொள்கை வழிகாட்டி என வசனம் பேசி புகழ்ந்திருப்பதன் வாயிலாக, தனக்கு ஆதரவாக ஆள் சேர்க்கும் பணியிலும், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணியிலும் அன்புமணி தீவிரமாக உள்ளதாக பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
''பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் சந்தித்தால் பிரச்னை தீர்ந்து விடும்,'' என, அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் பா.ம.க.,வை விட்டு செல்ல இருப்பதாக செய்தி பரப்புகின்றனர். கனவிலும் அதை என்னால் நினைக்க முடியாது. ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வாழ்ந்தவன். பணம், பதவி தான் முக்கியம் என்றால், நான் எங்கோ இருந்திருப்பேன். பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கு நான் காரணம் அல்ல.
சட்டசபையில் பேசி, எவ்வளவோ சாதித்திருக்கிறேன். நுழைவுத்தேர்வு ரத்து, லாட்டரி ஒழிப்பு என பலவற்றை சட்டசபையில் பேசி சாதித்தவன் நான். ஆனால், என் சட்டசபை நடவடிக்கைகளை கேலி செய்கின்றனர்.
கட்சித் தலைவராக இருந்த போதும், நான் என்னை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அது என்னிடம் உள்ள குறை. ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும் என்பதே என் ஆசை. இருவரும் நேரில் சந்தித்து பேசினால், பிரச்னை தீர்ந்து விடும். கட்சியினர் உற்சாகமாகி விடுவர்.
பா.ம.க., நிர்வாகிகள் யாரையும் மாற்றக்கூடாது என, ராமதாசிடம் வற்புறுத்தி வருகிறேன். அப்படி மாற்றுவதால், எந்தத் தீர்வும் கிடைக்காது. ஆனால், ராமதாஸ் ஒரு முடிவை எடுத்து விட்டார். ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் பேசி வருகிறேன்.
'குடும்பம், கட்சியினருக்கு தெரியாமல் எங்காவது சென்று விட வேண்டும் அல்லது நான் உயிரோடு இருக்கக்கூடாது' என்று ராமதாசிடம் கூறினேன். அந்த அளவுக்கு நான் வேதனையில் இருக்கிறேன். ராமதாஸ் கோபத்தில் சொன்ன வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. பா.ம.க.,வினர் அனைவரும் ராமதாசை நேசிக்கிறோம்; அன்புமணியை முன்னிலைப்படுத்துகிறோம். இதில், மாற்றுக் கருத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.