புதிதாக 74 மாவட்ட செயலர்கள் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி
புதிதாக 74 மாவட்ட செயலர்கள் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி
ADDED : ஜூன் 19, 2025 06:42 AM

திண்டிவனம் : பா.ம.க.,வில் இதுவரை 74 மாவட்ட செயலர்கள், 59 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி மோதல் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், கட்சியின் 108 மாவட்ட செயலர்கள், 108 மாவட்ட தலைவர்களில், யாரெல்லாம் அன்புமணி ஆதரவாளர் என ராமதாஸ் கணக்கெடுத்தார். இதையடுத்து, அன்புமணி ஆதரவாளர்களான மாவட்ட செயலர்களில் 74 பேரையும் மாவட்ட தலைவர்களில் 59 பேரையும் நீக்கிவிட்டு புதிதாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மீதமுள்ள மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் ராமதாசிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்பதால், அவர்கள் தொடர்கின்றனர். இதையடுத்து, புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ராமதாஸ், அவர்களைக்கொண்டு, விரைவில் பொதுக் குழுவை கூட்டும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, வியாழன்தோறும் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்திப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த சந்திப்பு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.