துாய்மை பணியாளர்கள் நீதி கேட்பு பயணம்; முறியடிக்கும் முயற்சியில் போலீஸ் மும்முரம்
துாய்மை பணியாளர்கள் நீதி கேட்பு பயணம்; முறியடிக்கும் முயற்சியில் போலீஸ் மும்முரம்
UPDATED : செப் 13, 2025 10:53 AM
ADDED : செப் 13, 2025 02:22 AM

சென்னை: துாய்மை பணியாளர்களை விடாமல் கைது செய்து வரும் போலீசார் நீதி கேட்டு மாநிலம் முழுதும் அவர்கள் நடத்தும் பிரசார பயணத்தை முறியடித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., மண்டலங்களின் துாய்மை பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் துாய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1ல் இருந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக நள்ளிரவில் இவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். எனினும் கடந்த 4ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் திரண்ட 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை கொருக்குப்பேட்டையில் துாய்மை பணியாளர்கள் 13 பேர் தங்கள் வீடு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் திரண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர்.
இவர்கள் மீண்டும் சென்னை மாநகராட்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் கைது செய்தனர். இப்படி துாய்மை பணியாளர்கள் போராடுவதும் அவர்களை போலீசார் கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் மாநிலம் முழுதும் உள்ள துாய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து நீதி கேட்கும் பிரசார பயணத்தை உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அனுமதி கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர்.
கோவையில் துவங்கிய பிரசார பயணம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி என பல ஊர்களுக்கு செல்ல உள்ளது. அரசு தங்களுக்கு இழைத்து வரும் அநீதி குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மாவட்டங்களை பிரித்து தனித்தனியாக வாகனங்களும் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் முறியடித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: எங்கள் போராட்டத்தை போலீசார் துணையுடன் அரசு முடக்கி விடுகிறது. எங்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டாக கூறி நீதிமன்றத்தையும் ஏமாற்ற பார்க்கிறது. இதனால் மாநிலம் முழுதும் பெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் மிரட்டல் விடுத்து வருகின்றனர். தடையை மீறி எங்கள் பயணமும், போராட்டமும் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.