நவாஸ்கனி எம்.பி.,க்கு எதிராக போஸ்டர்கள் புதுமடம் ஊருக்குள் நுழையாதீர்கள்
நவாஸ்கனி எம்.பி.,க்கு எதிராக போஸ்டர்கள் புதுமடம் ஊருக்குள் நுழையாதீர்கள்
ADDED : பிப் 06, 2024 03:16 AM

உச்சிப்புளி: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள், 'ஐந்தாண்டுகளாக எங்கே சென்றீர்கள். ஊருக்குள் நுழையாதீர்கள்,' என போஸ்டர்கள் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போஸ்டர்களில் கூறியிருப்பதாவது: 2019 எம்.பி., தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்க வந்தீர்கள். வெற்றி பெற்றதும் புதுமடத்தை மறந்தீர்கள். சொல்லும்படியாக புதுமடத்திற்கு எதுவுமே செய்யவில்லை. ஐந்தாண்டுகள் முடிந்து விட்டது. ஓரிரு மாதத்தில் மீண்டும் தேர்தல் வருவதால் உங்கள் முகத்தை மக்களுக்கு ஞாபகப்படுத்த தேர்தல் விளம்பரத்திற்காக மீண்டும் புதுமடம் வருகிறீர்கள். மக்களை ஏமாற்றும் நவாஸ் கனி அவர்களே, புதுமடம் மக்கள் ஏமாளிகள் அல்ல. மனசாட்சி ஒன்று இருந்தால் புதுமடத்தில் நுழையாதீர்கள்! நாங்கள் வரவேற்க மாட்டோம். இப்படிக்கு ஊர் பொதுமக்கள், புதுமடம், என இருந்தது. இதனால் அங்கு நடக்கயிருந்த கூட்டத்திற்கு நவாஸ்கனி எம்.பி., செல்லவில்லை.