ADDED : பிப் 29, 2024 11:49 PM

சென்னை:போத்தீஸ் ஜவுளிக்கடைகளின் உரிமையாளர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார், 84, சென்னையில் காலமானார்.
மறைந்த சடையாண்டி மூப்பனார், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், போத்தீஸ் மூப்பனார் - குருவம்மாள் தம்பதிக்கு ஒரே மகனாக, 1940, நவம்பர் 20ல் பிறந்தார்.
இவர் தந்தை, சைக்கிளில் ஜவுளி வியாபாரம் செய்து, ஸ்ரீவில்லிபுத்துாரில், 'போத்தி மூப்பனார் சன் அண்டு கோ' என்ற சிறிய துணிக்கடையை துவக்கினார். அதை பலமடங்கு பெருக்கி, வாடிக்கையாளர்களின் மதிப்பை பெற்றார்.
மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பிற மாநிலங்களிலும் போத்தீஸ் துணிக்கடைகளின் கிளைகளை திறந்து வளர்த்தார். தற்போது அவற்றை, அவரின் வாரிசுகளான ரமேஷ், போத்திராஜ், முருகேஷ், மகேஷ், கந்தசாமி, அசோக் ஆகியோர் கவனிக்கின்றனர்.
மறைந்த சடையாண்டி மூப்பனாரின் இறுதிச்சடங்குகள், அவரின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்துாரில், இன்று மாலை 4:30 மணிக்கு நடக்க உள்ளது.

