ADDED : ஜன 26, 2024 01:36 AM
சென்னை,:புதிய மின் இணைப்புக்கு, மொபைல் போன் செயலியில் ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை, சோதனை முயற்சியாக, 12 பிரிவு அலுவலகங்களில் செயல்படுத்த, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'களப்பிரிவு ஊழியர் மொபைல் போன் செயலியை' அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, கணக்கெடுக்க செல்லும் ஊழியர்கள், மீட்டரில் பதிவாகியுள்ள விபரங்களை, மொபைல் போன் செயலியில் கணக்கு எடுக்கின்றனர்.
இதனால், மின் கட்டண விபரம் உடனே கணக்கிடப்பட்டு, அலுவலக, 'சர்வர்' மற்றும் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செல்கிறது.
போன் செயலி வாயிலாக, 60,000 தொழில் மற்றும் வணிக இணைப்புகளிலும்; அனைத்து மாவட்டங்களிலும் தலா, 10 பிரிவு அலுவலகங்களில் உள்ள வீடுகள், கடைகள் போன்றவற்றில், 2023 இறுதியில் இருந்து மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
செயலியில் தற்போது...
l மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது
l குறைபாடு உடைய மீட்டர் மாற்ற ஒப்புதல், மின் பளுவை கூடுதலாக வழங்குவது மற்றும் குறைப்பது
l புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது
l மின் நுகர்வோரின் புகார்களை பெறுவது
l நுகர்வோரின் விபரங்கள் இடம்பெறுவது
ஆகிய கூடுதல் சேவைகளை விரிவாக்கம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ப, அந்த சேவைகளுக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது.
எனவே, சோதனை முயற்சியாக, போன் செயலியில் கூடுதல் சேவைகளை, சென்னை, கோவை உட்பட மாநிலம் முழுதும் உள்ள, 12 மண்டல அலுவலகங்களில், தலா ஒரு பிரிவு அலுவலகத்தில் செயல்படுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தினமும் காலை ஊழியர்கள், மின் கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலுடன் அவர்கள் வீடு சென்று, மின் வினியோகத்தை துண்டிப்பர். அந்த சமயத்தில், நுகர்வோர் கட்டணம் செலுத்தினாலும், ஊழியர் மாலையில் அலுவலகம் வந்து கணினியில் பார்த்து, உறுதி செய்த பின் தான், மின்சாரம் வழங்கப்படும்.
இந்த விபரங்களை, போன் செயலியில் எங்கிருந்தபடியும் உடனே அறிய முடியும். இதனால், நுகர்வோரின் பிரச்னைக்கும், விரைந்து தீர்வு காணலாம்.
உதவி பொறியாளர்களும், அலுவலகம் வந்து கணினி வாயிலாக புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் தருகின்றனர். இதையும் செயலியில், எங்கிருந்தபடியும் தர முடியும்.
எனவே, சோதனை முடிவுகளை பொறுத்து, மொபைல் செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் சேவைகள், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

