கைதியின் சம்பளத்தை 2 குழந்தைகளுக்கு சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும்; அசாதாரண தீர்வை வழங்கிய உயர்நீதிமன்றம்
கைதியின் சம்பளத்தை 2 குழந்தைகளுக்கு சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும்; அசாதாரண தீர்வை வழங்கிய உயர்நீதிமன்றம்
ADDED : மே 20, 2025 07:15 AM

மதுரை : ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மனுதாரர் சிறையில் செய்யும் வேலையின் சம்பளத்தை அவரது மனைவி மூலம் பிறந்த குழந்தை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு சமமாக வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் 'போர்மேனா'க பரமன் பணிபுரிந்தார். அங்கு வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்தார். அப்பெண் கர்ப்பமடைந்தார். அவரை திருமணம் செய்ய பரமன் மறுத்தார். சிவகாசி மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு 2019ல் விருதுநகர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தது. எதிர்த்து பரமன் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: தனது கிராம பெண்ணை பாதுகாக்க மனுதாரர் தவறிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணை ஆதரவற்ற நிலைக்கு தள்ளிவிட்டார். அவரது குழந்தை தந்தை இல்லாமல், சமூக, பொருளாதார ரீதியாக துன்பப்படுவதை தவிர, வாழ்நாள் முழுவதும் களங்கத்துடன் வளரும் நிலைக்கு தள்ளிவிட்டார். மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத்துடன் இந்நீதிமன்றத்தின் கடமை முடிவடைவதில்லை. மனுதாரருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். (மனுதாரரின் மனைவி மூலம் பிறந்த குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த குழந்தை). அவர்கள் வளர வேண்டும். குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவு வழங்குவதற்காக, உடல் தகுதியுள்ள மனுதாரரை சிறை நிர்வாகம் வேலையில் ஈடுபடுத்த வேண்டும். வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தை 2 குழந்தைகளுக்கும் சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர், அப்பாவி குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்க அசாதாரண தீர்வை இந்நீதிமன்றம் வழங்குகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

