பால் பொருட்களின் விலையை குறைத்த தனியார் நிறுவனங்கள்; அரசின் ஆவின் நிறுவனம் மறுப்பு
பால் பொருட்களின் விலையை குறைத்த தனியார் நிறுவனங்கள்; அரசின் ஆவின் நிறுவனம் மறுப்பு
ADDED : செப் 23, 2025 04:07 AM

சென்னை : ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளன. ஆனால், தமிழக அரசின் ஆவின் நிறுவனம், விலையை குறைக்க மறுத்துள்ளது.
ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, பால் பவுடர், வெண்ணெய், நெய், பனீர், இனிப்பு வகைகள் என, 120க்கும் அதிகமான பால் பொருட்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றி அமைத்ததில், வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதனால், தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு, பால் பொருட்கள் விலையை குறைத்துள்ளன. அதேபோல, ஆவின் பால் பொருட்கள் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெய் விலையை மட்டும் லிட்டருக்கு, 40 ரூபாய் குறைத்துள்ளது. வெண்ணெய், பனீ ர் விலையை குறைக்கவில்லை.
இதுகுறித்து, ஆவின் மேலாண் இயக்குநர் அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை:
ஆவின் விற்பனை வாயிலாக வரும் வருவாயில், 90 சதவீதத்திற்கு மேல் பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் வைத்து, சந்தையில் குறைவான விலையில், தரத்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்கிறது. ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் பண்டிகை கா ல சலுகையாக நெய் லிட்டருக்கு, 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., விகிதம் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், ஆவின் நிர்வாகம் விலையை குறைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., தலைவர் தினகரன் ஆகியோர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.