தனியார் மருத்துவமனை நோயாளிகளும் அரசிடம் இலவச செயற்கை கால் பெறலாம்
தனியார் மருத்துவமனை நோயாளிகளும் அரசிடம் இலவச செயற்கை கால் பெறலாம்
ADDED : ஜூலை 05, 2025 12:38 AM
சென்னை:'நீரிழிவு நோயால் கால்களை இழந்தவர்கள், 'பாதம் காப்போம்' திட்டத்தில் செயற்கை கால்கள் பெற, அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பிக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளும், இலவசமாக செயற்கை கால் பெற, அரசு மருத்துவமனையில் விண்ணப்பிக்கலாம்' என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை நோயால், 82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முறையாக சிகிச்சை பெறதாதவர்கள், தங்களது கால் விரல் மற்றும் கால்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்காக, நீரிழிவு நோயாளிகளுக்கான பாதம் காப்போம் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு செயல்படுத்தியது.
இத்திட்டத்தில், கால் புண் சிகிச்சை, நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் அளிப்பதுடன், காலணி வழங்குதல், செயற்கை கால்கள் வழங்குதல் உள்ளிட்ட உதவிகளும் செய்யப்படுகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் வரை, பாத மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 21.74 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 19,500 பேருக்கு கால்புண் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இத்திட்டத்தில் செயற்கை கால்கள் வழங்கும் வசதி இருப்பதால், அதை பயன்படுத்தி கொள்ளுமாறு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் பணியாளர்கள் வாயிலாக, நீரிழிவு நோயாளிகளுக்கு பாத பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின், அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும்.
இதில், கால்களை இழந்தவர்களுக்கு, முதல்வர் மருத்துவ காப்பீட்டு சிகிச்சை வாயிலாக, செயற்கை கால் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், செயற்கை கால் கோரி, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில், உரிய மருத்துவ சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.