ஒரு திருமணத்துக்கு இரு சான்றிதழ்கள்: பதிவுத்துறையால் பொதுமக்கள் குழப்பம்
ஒரு திருமணத்துக்கு இரு சான்றிதழ்கள்: பதிவுத்துறையால் பொதுமக்கள் குழப்பம்
UPDATED : செப் 01, 2025 10:08 AM
ADDED : செப் 01, 2025 01:14 AM

சென்னை: ஒரு திருமணத்தை பதிவு செய்யும் போது, பதிவுத்துறையினர் இரண்டு சான்றிதழ்கள் வழங்குவது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சொத்து பத்திரங்கள் போன்று, திருமண பதிவு பணிகளும், பதிவுத்துறை கட்டுப்பாட்டில் வருகின்றன.
புதிதாக திருமணம் செய்வோர், 'ஹிந்து திருமண சட்டம் - 1955, சிறப்பு திருமண சட்டம் - 1954, தமிழக திருமண பதிவு சட்டம் - 2009' ஆகிய மூன்றில், ஏதேனும் ஒன்றின்படி தங்கள் திருமணத்தை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதில் இல்லை ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர், அதே மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யும் போது, ஹிந்து திருமண சட்டப்படி பதிவு செய்யலாம்.
மணமக்களில் ஒருவர் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தால், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக, இந்த நடைமுறை அமலில் உள்ளது.
சமீப காலமாக, ஹிந்து திருமண சட்டத்தில், திருமணத்தை பதிவு செய்ய ஒருவர் விண்ணப்பித்தால், அவரிடம், தமிழக திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய, ஒரு விண்ணப்பம் கூடுதலாக பெறப்படுகிறது.
இரண்டு விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு திருமண பதிவு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஒரு திருமணத்துக்கு இரண்டு விண்ணப்பம், இரண்டு சான்றிதழ் எதற்கு என விசாரித்தால், சார் - பதிவாளர்கள் உரிய பதில் தருவதில்லை. இது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஹிந்து திருமணங்களை பொறுத்தவரை, மூன்று சட்டங்கள் அமலில் உள்ளன. இதில், விண்ணப்பதாரர்களுக்கு எது பொருந்துமோ அதன் அடிப்படையிலேயே பதிவு செய்ய வேண்டும். சமீபகாலமாக இரண்டு சான்றிதழ் வழங்குவதாக புகார்கள் வருகின்றன.
கடந்த, 2009ல் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய சட்டம் இயற்ற உத்தரவிட்டது.
அதன் அடிப்படையிலேயே, 'தமிழக திருமண பதிவு சட்டம் - 2009' நிறைவேற்றப்பட்டது. திருமணம் நடந்த, 90 நாட்களுக்குள், இந்த சட்டப்படி பதிவு செய்வது கட்டாயம். ஹிந்து திருமண சட்டம் அமலில் உள்ளதால், பொதுமக்கள் அதில் விண்ணப்பம் அளிக்கின்றனர்.
புகைப்படம் இதன்படி பதிவு செய்து சான்றிதழ் அளித்தாலும், தமிழக திருமண பதிவு சட்டத்தை சுட்டிக்காட்டி, கூடுதல் விண்ணப்பம் பெறப்பட்டு அதற்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஹிந்து திருமண சட்டப்படி வழங்கப்படும் சான்றிதழில், குறிப்பிட்ட சில விபரங்கள் மட்டுமே இருக்கும்; புகைப்படங்கள் இடம் பெறாது. ஆனால், பாஸ்போர்ட், விசா போன்றவை பெற, இந்த சான்றிதழ் அவசியமாகிறது.
தமிழக திருமண பதிவு சட்டத்தில், புகைப்படங்கள் மற்றும் திருமணம் நடந்து முடிந்தது குறித்த கூடுதல் விபரங்கள் இடம் பெறும். இதுகுறித்த விபரங்களை மக்களிடம் தெரிவிக்கும்படி, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இரண்டு சான்றிதழ் பெறுவது கட்டாயமல்ல, மக்களின் விருப்பம் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.