அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க முயன்ற புகழேந்தி விரக்தி
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க முயன்ற புகழேந்தி விரக்தி
ADDED : செப் 16, 2025 05:11 AM

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை ஒன்றாக சந்திக்க வைக்க, பெங்களூரு புகழேந்தி எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அவரது கோபிசெட்டிபாளையம் வீட்டில் புகழேந்தி சந்தித்து பேசினார்.
அப்போது, அண்ணாதுரையின், பிறந்த நாளில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை சந்திக்க வைக்க புகழேந்தி விரும்பினார்.
சென்னையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போது, நான்கு பேரும் சந்தித்து பேச வேண்டும்; பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்திக்க வேண்டும். அப்போது, 'பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கு அறைகூவல் விடுக்க வேண்டும்' என புகழேந்தி முடிவு செய்து, தன் திட்டத்தை நான்கு பேரிடமும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அது கைகூடவில்லை. சென்னையில் அண்ணாதுரை சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, பன்னீர்செல்வம் அவசர வேலையாக தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசிய பின், அவர்கள் எடுக்கிற முடிவுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என, சசிகலாவும் கூறிவிட்டு, போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில், அண்ணாதுரை படத்திற்கு தனியே மரியாதை செலுத்தியுள்ளார்.
தினகரன் தஞ்சாவூர் சென்று விட்டார். செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தில், தன் ஆதரவாளர்களுடன் அண்ணாதுரை பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், பெங்களூரு புகழேந்தியும், தன் ஆதரவாளர்களுடன், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வுகளுக்கு பின், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பவர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை; இவர்களை வைத்துக் கொண்டு கட்சியை எப்படி ஒருங்கிணைக்க வலியுறுத்துவது?' என, பெங்களூரு புகழேந்தி விரக்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

