ஜல்லி, எம் சாண்ட் விலை திடீர் உயர்வு குவாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
ஜல்லி, எம் சாண்ட் விலை திடீர் உயர்வு குவாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 26, 2024 01:40 AM

சென்னை:தமிழகத்தில் கட்டுமான பணிக்கான கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் ஆகியவற்றின் விலை, பிப்., 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக, குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 1,500 இடங்களில், 3,000 கருங்கல் குவாரிகள், 4,800 இடங்களில் கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பாலான குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்படுகின்றன.
குவாரிகளில் இருந்து கருங்கல் ஜல்லி உள்ளிட்ட பொருட்களை எடுக்கும்போது, அதற்கான உரிம தொகையை தொகையை, குவாரி உரிமையாளர்கள், அரசுக்கு அளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த உரிமத் தொகை, சில மாதங்கள் முன் உயர்த்தப்பட்டது.
இதனால், ஏற்கனவே செலுத்திய தொகையை விட இரண்டு மடங்கு வரை உரிமை தொகையை, அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளதாக, குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த பின்னணியில், கனிம வளத்துறையில் கெடுபிடியை கண்டித்து, குவாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு நடத்திய நிலையில், வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பின்னணியில், கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் விலையை உயர்த்த, குவாரி உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி, கருங்கல் ஜல்லி, வெட் மிக்ஸ் ஆகியவற்றின் விலையை 1 யூனிட், 2,500 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, 1 யூனிட் எம் சாண்ட் விலை, 3,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
இதுவும், 10 கி.மீ., சுற்றளவு வரை போக்குவரத்து செலவாக, 1,000 ரூபாய் சேர்க்கப்படும். இதற்கு அப்பால் உள்ள பகுதிக்கு, தொலைவுக்கு ஏற்ப போக்குவரத்து செலவு மற்றும் ஜி.எஸ்.டி., தனியாக சேர்க்கப்படும்.
கடந்த அக்டோபரில், சில மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, பிப்., 1 முதல் தமிழகம் முழுதும் அமல்படுத்தப்பட உள்ளதாக, கருங்கல் குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
கட்டுமான பணிக்கு, அத்தியாவசிய தேவையான கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் ஆகியவற்றின் விலையை, குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாக உயர்த்துகின்றனர். இது விஷயத்தில் அரசு மவுனமாக இருப்பதால், வீடு கட்டும் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கட்டுமான துறை, குவாரி உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி, அரசே நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

