ADDED : செப் 20, 2025 01:44 AM
சென்னை:ரேபிஸ் தடுப்பு சிகிச்சைகள் குறித்து, அனைத்து டாக்டர்களுக்கும், பயிற்சி அளிக்க வேண்டும்' என, மருத்துவ கல்லுாரி நிர்வாகங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, என்.எம்.சி., செயலர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பெரும்பாலும் நாய்க்கடி வாயிலாக பரவும் ரேபிஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அந்த பாதிப்பு ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயம் என்றாலும், உரிய சிகிச்சைகளின் வாயிலாக, அத்தகைய நிலை ஏற்படாமல், 100 சதவீதம் தடுக்க முடியும். வரும் 2030க்குள், ரேபிஸ் தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை, மத்திய சுகாதார அமைச்சகமும், கால்நடை அமைச்சகமும் ஒருங்கிணைந்து முன்னெடுத்துள்ளன.
அதற்கு, விலங்கு கடிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து, மருத்துவ அலுவலர்கள், இளநிலை மற்றும் முதுநிலை டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில், ரேபிஸ் தடுப்பூசிகள், ரேபிஸ் எதிர்ப்பாற்றல் தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், விலங்கு கடி பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் விபரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

