ADDED : செப் 13, 2025 12:53 AM

சென்னை:பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ் குமார் கூறியதாவது:
ரேஷன் கடைகளுக்கு தனி துறையை உருவாக்குவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவற்றை அரசு ஏற்காததால், சென்னையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 3,300 பேர் பங்கேற்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கூடுதல் பதிவாளர் அமிரித், 'வரும் 20ம் தேதிக்குள் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய, குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரையை பெற்று, டிசம்பருக்குள் ஊதிய உயர்வு வழங்கப்படும்' என தெரிவித்தார்.
அதிகாரிகள் தெரிவித்தபடி, டிசம்பருக்குள் ஊதிய உயர்வு வழங்கவில்லை எனில், வரும் ஜனவரி முதல், ரேஷன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

