மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு; கொரோனா பெயர் கூறாமல் உத்தரவு
மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு; கொரோனா பெயர் கூறாமல் உத்தரவு
ADDED : மே 27, 2025 04:20 AM

சென்னை: நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில், அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி, அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா, இன்ப்ளூயன்ஸா வைரஸ், காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள், தற்போது அதிகரித்து காணப்படுகின்றன.
ஆன்மிக நிகழ்ச்சி
இவற்றை கட்டுப்படுத்த, வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சமூக, கலாசார, ஆன்மிக நிகழ்ச்சிகள், அரசியல் பொதுக்கூட்டங்கள், அதிக எண்ணிக்கையில் நடப்பதும், அவற்றில் திரளானோர் பங்கேற்பதும், தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
அதை கருத்தில் வைத்து, அத்தகைய கூட்டங்களில், தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.
குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறைகளை துாய்மையாக பராமரிப்பதுடன், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை வினியோகிக்க கூடாது.
ஒத்திவைக்கலாம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, போதிய அளவு இருத்தல் வேண்டும்.
குறிப்பிட்ட இடத்திலோ, பகுதியிலோ நோய்த் தொற்று பரவினால், அப்பகுதியை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிடத்தில் தீவிர நோய் பரவல் இருந்தால், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்கவோ, நிறுத்தி வைக்கவோ நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.