ADDED : ஜன 28, 2024 01:34 AM
சென்னை: தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, சிறப்பு உதவித் தொகையை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வெல்லும் திறன் வாய்ந்த, தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, தேவையான அடிப்படை உதவிகளை வழங்க, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், செஸ் விளையாட்டு வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி ஆகியோருக்கு, சர்வதேச போட்டி பயிற்சிக்கான செலவின தொகையாக, தலா 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகச்சந்திரன், வரும் ஏப்., 3ம் தேதி உலகிலேயே உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி; அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை டில்லியில் நடக்கும், சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில், பங்கேற்கும் பிரியதர்ஷினிக்கு 55,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, மாற்றுத்திறன் தடகள வீரர் ராஜேசுக்கு, 12 லட்சம் ரூபாய் செலவில், செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.