விஜய் வீட்டிற்குள் வாலிபர் புகுந்த விவகாரம்: பாதுகாப்பு படை வீரர்களிடம் விசாரணை
விஜய் வீட்டிற்குள் வாலிபர் புகுந்த விவகாரம்: பாதுகாப்பு படை வீரர்களிடம் விசாரணை
ADDED : செப் 23, 2025 06:46 AM

சென்னை; நடிகர் விஜய் வீட்டிற்குள் வாலிபர் புகுந்த நாளன்று, பாதுகாப்பு பணியில் இருந்த, 'ஒய் பிரிவு' பாதுகாப்பு படை வீரர்களிடம், சி.ஆர்.பி.எப்., அதிகாரி கள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வீடு, சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ளது. இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டிற்குள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண், 24, என்பவர் புகுந்தார்.
வீட்டு மொட்டை மாடியில் பதுங்கி இருந்தவரை, நடைபயிற்சிக்கு சென்ற விஜய் பிடித்து, காவலாளி வாயிலாக நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தார். அருண், மனநலம் பாதிக்கப்பட்ட வர் என்பதால், போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. பாதுகாப்பு பணியில், என்.எஸ்.ஜி., என்ற தேசிய பாதுகாப்பு படை, எஸ்.பி.ஜி., என்ற தேசிய பாதுகாப்பு குழுவில் பயிற்சி பெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்கள், எட்டு முதல் 11 பேர் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள், வி.ஐ.பி., செக்யூரிட்டி கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மீறி மர்ம நபர்கள், விஜயை நெருங்க முடியாது என, சி.ஆர்.பி.எப்., துணை கமிஷனர் பெருமாள் தெரிவித்து இருந்தார். ஆனால், ஒய் பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டிற்குள் அருண் புகுந்தது, பாதுகாப்பு குளறுபடி இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளது. இதனால், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம் விசாரணை துவங்கி உள்ளது.
சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் கூறுகையில், 'சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அலட்சியமாக இருந்தனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய் தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வீரர்கள், ' சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என்றனர்.