ADDED : ஜூன் 26, 2025 12:24 AM
சென்னை:'ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் கீழ், நடப்பாண்டில் 37,050 இளைஞர்களுக்கு, சுய தொழில் பயிற்சி வழங்கப்படும்' என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பில், மாவட்டம் தோறும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் வாயிலாக, கிராமப்புற இளைஞர்களுக்கு, 64 வகை சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள், கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பை நிறைவு செய்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்கள், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறத் தகுதியானவர்கள். பயிற்சியை நிறைவு செய்வோருக்கு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் வாயிலாக, சான்றிதழ் வழங்கப்படுவதோடு, சுய தொழில் துவங்க கடணுதவி வழங்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் கீழ், 1.17 லட்சம் இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி பெற்று, அவர்களில் 67,158 பேர் சுய தொழில் துவங்கி உள்ளனர். நடப்பாண்டில் 37,050 இளைஞர்களுக்கு, 64 வகையான தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன் அடிப்படையில், இளைஞர்கள் தங்களுக்கான பயிற்சியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை, 18003098039 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.