ADDED : செப் 16, 2025 07:52 AM

சென்னை : ''ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம்; யாருக்கும் அஞ்ச மாட்டோம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், அவர் பேசியதாவது:
ஒரு வாரத்திற்கு முன், சென்னை டி.ஜி.பி., அலுவலகம் முன் ஒருவரை கடுமையாக தாக்கினர்; தாக்கப்பட்டவர் மீதே வழக்கு போட்டு, சிறையில் அடைத்துள்ளனர்.
கைக்கூலிகள்
தி.மு.க., ஆட்சியில் போலீசுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த ஆறு மாதங்களில், ஆறு காவலர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
சென்னை நொளம்பூர் ரோந்து காவலரை போதை கும்பல் தாக்கியுள்ளது. தி.மு.க., ஊராட்சித் தலைவர் ஒருவர், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு பெரும்பாலும் தி.மு.க.,வினரே துணை நிற்பதாக தகவல் வருகிறது.
சட்டம் - ஒழுங்கை காப்பதில், இந்த அரசு தள்ளாடி வருகிறது. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார் என்பது, அ.தி.மு.க., ஆட்சியில் கண்டுபிடிக்கப்படும்.
தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. மதுரை மாநகராட்சி வரி வசூலில், 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆடு, மாடு, பன்றிக்கு கூட வரி போட்டனர். பன்றி வரியிலும் ஊழல் செய்துள்ளனர். மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்து பேச்சு நடத்த இருக்கிறார். உட்கட்சி பிரச்னை குறித்து பேச இருக்கிறார்' என்கின்றனர். அ.தி.மு.க.,வை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட, தன்மானம் தான் முக்கியம்.
சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றனர். அந்தக் கைக்கூலி யார் என்பதை அடையாளம் காட்டி விட்டோம்; அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க ஓட்டு போட்டவர்களை மன்னித்து, துணை முதல்வர் பதவி கொடுத்தோம். ஆனாலும் திருந்தாமல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்; அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா?
அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க, 18 எம்.எல்.ஏ.,க்களை கடத்திச் சென்றவரை எப்படி மீண்டும் கட்சியில் சேர்ப்பது?
மிரட்ட முடியாது
நான் தொண்டனாக இருந்து உயர்ந்தவன்; யாருக்கும் அஞ்ச மாட்டேன்; யாரும் என்னை மிரட்டிப் பார்க்க முடியாது.
ஜெயலலிதா மறைவுககுப் பின் சிலர், அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்யவும், ஆட்சியை கவிழ்க்கவும் பார்த்தனர்.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தான், அதை காப்பாற்றி கொடுத்தனர். அதனால், நன்றி மறவாமல் இருக்கிறோம். எதிரிகளை வீழ்த்துவதற்கே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்ததும், தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனாலேயே ஏதேதோ பேசி வருகின்றனர். மத்தியில் ஆட்சி செய்பவர்கள், இன்று வரை நமக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.