'மேக்ஸி கேப்' வேன்களை மினி பஸ்களாக இயக்கலாம் தமிழக அரசு அனுமதி
'மேக்ஸி கேப்' வேன்களை மினி பஸ்களாக இயக்கலாம் தமிழக அரசு அனுமதி
ADDED : செப் 13, 2025 12:42 AM
சென்னை:தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளை இணைக்கும் வகையில், 'மேக்ஸி கேப்' வேன்களை, 'மினி பஸ்'களாக இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய மினி பஸ் விரிவாக்க திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம். அதன்படி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில், 500க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'மேக்ஸி கேப்' வேன்களை மினி பஸ்களாக இயக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிராமப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில், மினி பஸ்கள் திட்டத்தை புதுப்பித்து, ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதில், 1,000 உரிமையாளர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் குறைந்தது, 5,000 மினி பஸ்கள் தேவைப்படுகின்றன. எனவே, தனியார் மேக்ஸி கேப் வேன்களை, மினி பஸ்களாக இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 முதல் 16 இருக்கைகள் உடைய வேன்களை, பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தலாம்.
இதற்காக, பொது போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம், 185 செ.மீ., என்பதை திருத்தி, 200 செ.மீ., ஆக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ப, மேக்ஸி கேப் வேன்களை மாற்றி வடிவமைத்தால், மினி பஸ்களாக இயக்கலாம். அதேநேரம், வேன்களில் பயணியர் நின்று செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

