ஆதிதிராவிட தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்! உதயநிதி பெருமிதம்
ஆதிதிராவிட தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்! உதயநிதி பெருமிதம்
ADDED : ஜன 26, 2024 10:03 PM

சென்னை:சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் பழங்குடியின தொழில் முனைவோருக்கான, இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவங்கியது.
கண்காட்சியை துவக்கி வைத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள், 5,000த்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; குடும்பத் தொழிலை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கூறினர். அதை உடைத்து மாற்றியவர்கள் தி.மு.க.,வினர்.
தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு நிறுவனமான தாட்கோ, 1974ல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் வீடு கட்டிக் கொடுக்கும் அமைப்பாக இருந்தது. தற்போது, பல தொழில் முனைவோரை உருவாக்கும் ஒரு நிலையமாக உள்ளது.
ஆதிதிராவிட, பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய அளவில் அதிக தொழில் முனைவராக உள்ள மாநிலமாக, தமிழகம் உள்ளது. இதுதான் உண்மையான வளர்ச்சி.
யாரும் முதலாளியாக பிறப்பதில்லை; முயற்சித்தால் அனைவரும் முதலாளிதான். உதாரணமாக, 30 கோடி ரூபாய் நிதியில் துவக்கப்பட்டு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் நடத்தக்கூடிய, 26 நிறுவனங்கள் உள்ளன. இதில், 15 நிறுவனங்கள் மகளிரால் நடத்தப்படுகின்றன.
அம்பேத்கர் பெயரில் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம். இத்திட்டம் வாயிலாக தொழில் துவங்குவோருக்கு, 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அரியலுார் மாவட்டத்தில் மட்டும், 2,000 பேர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

