ஆடும் குதிரை, ஓடும் ரயில் பொம்மை தயாரிப்பில் களமிறங்கும் 'டான்சி'
ஆடும் குதிரை, ஓடும் ரயில் பொம்மை தயாரிப்பில் களமிறங்கும் 'டான்சி'
ADDED : ஜூன் 07, 2025 01:01 AM
சென்னை:சிறுவர்கள் விளையாடும் பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனையில், தமிழக அரசின், 'டான்சி' நிறுவனம் ஈடுபட உள்ளது. இதற்காக, சென்னை கிண்டியில், 1.50 கோடி ரூபாயில் தயாரிப்புக்கூடம் அமைக்கப்பட உள்ளது.
மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், பீரோ, கட்டில், அலமாரி உள்ளிட்ட இரும்பு சாமான்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், டான்சி எனப்படும் தமிழக சிறுதொழில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, 20 தயாரிப்புக்கூடங்கள் உள்ளன.
அதிக தேவை
அங்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மூலப்பொருட்களை பயன்படுத்தி, பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; அவை, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு விற்கப்படுகின்றன.
நாட்டில் குழந்தைகள் விளையாடும் பொம்மை, விளையாட்டு சாமான்களுக்கு அதிக தேவை உள்ளது.
இவை, சீனாவில் இருந்து தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. உள்நாட்டில் பொம்மை தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் இருந்து பொம்மை, விளையாட்டு பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனால், உள்நாட்டில் பொம்மை தயாரிப்பில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, தமிழகத்தில் பொம்மை தயாரிப்பில் ஈடுபட, டான்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, சென்னை கிண்டியில், 1.50 கோடி ரூபாய் செலவில் தனி தயாரிப்புக்கூடம் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, டான்சி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டான்சி தயாரிப்புகளில் தரத்திற்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதன் தயாரிப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை விட, பல ஆண்டுகளுக்கு உறுதியாக உள்ளன. இதனால், டான்சி தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு உள்ளது.
அதை சிறுவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, புதிர் விளையாட்டுக்கான பொம்மைகள், நகரும் விலங்கு பொம்மைகள், ஆடும் குதிரை, ஓடும் ரயில் உட்பட பல வகை பொம்மைகளை தயாரித்து விற்க உள்ளோம். இவை பள்ளிகள் வாயிலாகவும், மக்களுக்கு நேரடியாகவும் விற்கப்படும்.
ஆர்டர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக டான்சி விற்பனை ஆண்டுதோறும் சராசரியாக, 100 கோடி ரூபாயை தாண்டியது. இந்தாண்டில், 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் ஏப்., முதல் மே வரை, 25 கோடி ரூபாய்க்கு, 'ஆர்டர்'கள் கிடைத்துள்ளன. அரசு துறைகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மேஜை, கட்டில்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.