வரி பிடித்தம் விவகாரம்: நடிகர் வழக்கு முடித்துவைப்பு
வரி பிடித்தம் விவகாரம்: நடிகர் வழக்கு முடித்துவைப்பு
ADDED : ஜன 17, 2024 03:13 AM
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனிடம் பிடித்தம் செய்யப்பட்ட, டி.டி.எஸ்., வரித் தொகையில், 12.60 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
'ஸ்டூடியோ கிரீன் பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜா. இவருக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே 2018ல், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது; நடிகர் சம்பளம், 15 கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 'எனக்கு, 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. மீதி 4 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. சம்பள பாக்கியை தரவும், பிடித்தம் செய்த தொகையை வருமான வரித் துறையில் செலுத்தவும், தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்' என, சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பிலும், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, சிவகார்த்திகேயன்,- ஞானவேல்ராஜா இடையே, சுமுக தீர்வு ஏற்பட்டு, பிடித்தம் செய்த தொகை, வருமான வரித் துறையில் செலுத்தப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகார்த்திகேயனிடன் பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையில் 'ரீபண்ட்' 12.60 லட்சம் ரூபாயை, வட்டியுடன் திருப்பி செலுத்த விட்டதாக, வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.

