தொழில்நுட்பக் கோளாறு; கடைசி நேரத்தில் சென்னை - மதுரை செல்லும் இண்டிகோ விமான சேவை ரத்து
தொழில்நுட்பக் கோளாறு; கடைசி நேரத்தில் சென்னை - மதுரை செல்லும் இண்டிகோ விமான சேவை ரத்து
UPDATED : ஜூன் 22, 2025 06:16 PM
ADDED : ஜூன் 22, 2025 05:03 PM

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தொழில்நுட்ப பிரச்னை உள்பட பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா உள்பட பல்வேறு விமானங்களின் சேவை அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளானது. இது விமானப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சண்டிகரில் இருந்து லக்னோ செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பறப்பதற்கு முன்பான சோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், இந்த விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பயணிகளுக்கு மாற்று விமான வசதியோ அல்லது முழு பணத்தை திருப்பி தர தயாராக இருப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல, இன்று சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த இண்டிகோ விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏர் இந்தியாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பர்மிங்ஹாம் நகரில் இருந்து இன்று டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தரை இறங்கியது. விமானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.