sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் கவர்னர்

/

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் கவர்னர்

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் கவர்னர்

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் கவர்னர்


ADDED : ஜன 26, 2024 09:19 PM

Google News

ADDED : ஜன 26, 2024 09:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் , குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர்ரவி தேசியக்கொடியேற்றி, அணிவகுப்புமரியாதையை ஏற்றார்.

சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை அருகே, நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காலை 7:52 மணிக்கு, மோட்டார் சைக்கிள்களில் போலீசார் அணிவகுக்க, முதல்வர் ஸ்டாலின் விழா நடக்கும் இடத்திற்கு வந்தார்.

அணிவகுப்பு நடக்கும் இடத்தை சுற்றி, பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, விழா மேடைக்கு சென்றார். அவரை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

வீரதீர செயல்


காலை 7:54 மணிக்கு, ஒன்பது இரு சக்கர வாகனங்களில், விமானப்படை வீரர்கள் அணிவகுக்க, கவர்னர் ரவி தன் மனைவி லட்சுமியுடன் காரில் வந்தார்.

அவரும் சுற்றி வந்து, பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு மேடைக்கு சென்றார். அவரை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின், தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் வான்படை நிலைய அதிகாரி ஏர் கமோடர் ரத்திஷ்குமார், கிழக்கு மண்டலம் கடலோரக் காவல் படை கமாண்டர் இன்ஸ்பெக்டர் டோனி மைக்கேல், போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் ஆகியோரை, கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

காலை 8:00 மணிக்கு கவர்னர் ரவி, தேசியக் கொடியேற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக, பட்டொளி வீசி பறந்த தேசியக்கொடி மீது, மலர்கள் துாவப்பட்டன; தேசியகீதம் இசைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு தளவாய் விங் கமாண்டர் விகாஷ் ஷா தலைமையில், அணிவகுப்பு துவங்கியது.

ராணுவ படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை, வான்படைப் பிரிவு, கடலோர காவல் படைப் பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் பின்னால், ராணுவப் படை, கடற்படை, வான் படை , கடலோரக் காவல் படை ஊர்திகள் அணிவகுத்து வந்தன.

அணிவகுப்பு மரியாதையை, கவர்னர் ஏற்றுக் கொண்ட பின், மேடைக்கு சென்றார்.

அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கான, நாராயணசாமி நாயுடு விருது, முதல்வரின் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வரின் கோப்பை ஆகியவற்றை வழங்கினார்; அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

காலை 8:22 மணிக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஒடிசா மாநிலம் சம்பல்புரி நடனம்; மணிப்பூர் மாநிலத்தின் லால் ஹரோடா நடனம்; கர்நாடகா மாநிலத்தில் பழங்குடியினர் சித்தி நடனம்; தமிழகத்தின் கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் நடந்தன.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. அரசு துறைகளைச் சேர்ந்த 22 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

போர் நினைவிடம்


வாகன அணிவகுப்பு முடிந்ததும், அணிவகுப்புத் தளவாய் விங் கமாண்டர் விகாஷ் ஷாவை, கவர்னரிடம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. காலை 9:10 மணிக்கு விழா நிறைவடைந்தது.

விழாவில், சபாநாயகர் அப்பாவு, துணைசபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, சென்னையில் உள்ள போர் நினைவிடத்திற்கு, கவர்னர் ரவி சென்றார். உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பார்வையாளர்களுடன் அமைச்சர்


குடியரசு தின விழாவுக்கு தாமதமாக வந்த, அமைச்சர் கீதா ஜீவனால், அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைக்கு செல்ல முடியவில்லை. எனவே, பார்வையாளர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். வாகன அணிவகுப்பில் இடம்பெற்ற சமூக நலத்துறை ஊர்தியை, பார்வையாளர்களுடன் அமர்ந்து ரசித்தார்.



அருகருகே!


கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே, கொள்கை ரீதியாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று குடியரசு தின விழாவில், இருவரும் சந்தித்துக் கொண்டனர். மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் சகஜமாக பேசினர்; முதல்வர் ஏதோ கூற, கவர்னர் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார்.***



மக்கள் ஆர்வம்!


குடியரசு தின விழா நிகழ்ச்சியை பார்ப்பதற்காக, பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பெரும்பாலானோர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். பொதுமக்கள் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, ஆங்காங்கே எல்.இ.டி., திரையில், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பார்வையாளர்களில் பெண் ஒருவர் மயக்கமடைந்தார். அவருக்கு காவலர்கள் முதலுதவி அளித்து, அவர் பாதுகாப்பாக வெளியில் செல்ல உதவினர்.விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பாரதிதாசனின், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாடலுக்கு நடனமாடினர். ஆனால், அரசு தரப்பில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில், பாரதியார் எழுதிய பாடல் என தவறாக குறிப்பிட்டிருந்தனர்.








      Dinamalar
      Follow us