UPDATED : அக் 02, 2025 02:09 AM
ADDED : அக் 02, 2025 12:57 AM

சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக, திடீர் சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு, ஆண்டு கணக்கில் ஆகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதில், ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 160க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், மாநிலத்தில் நடக்கும் பழங்கால சிலைகள் மற்றும் கலை பொருட்கள் கடத்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் ஆண்டுக்கணக்கில் முடங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சிலை திருட்டு தொடர்பாக, தமிழகத்தில் உள்ள, 38 காவல் நிலையங்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நீதிமன்றமும், 'தமிழகத்தில் இருந்து, 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதா, வழக்கு எந்த நிலையில் உள்ளது' என, கேள்வி எழுப்பி உள்ளது.
பதில் அளிக்காவிட்டால், தலைமை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.
சமீபத்திய சில ஆண்டுகளாக தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படாத நிலையில் உள்ளது. அதற்கு முன் இப்பிரிவு போலீசார் தான், அமெரிக்க வாழ் இந்தியரான சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் இருந்த போது, திடீர் சோதனைகள், கைது நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன.
அதன்பின், போலீசார், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியக இணையதளங்களில் பதிவேற்றம் செய்து இருக்கும் படங்களை ஆய்வு செய்து, அது தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையா என்பதை, அடையாளம் காண்பர்; அதுபற்றி அறிவிப்பும் வெளியிடுவர். தற்போது, அந்த பணிகள் கூட நடக்கவில்லை.
இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பாடுகள் குறித்து, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

