ADDED : மே 28, 2025 07:12 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 27) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
தொழிலாளிக்கு 'ஆயுள்'
நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரமோத் குட்டன், 25. இவர் கடந்த, 2020ல் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பலாத்காரம் செய்தார். கர்ப்பமான சிறுமிக்கு, 2021ல் பெண் குழந்தை இறந்து பிறந்தது.
ஊட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், பிரமோத் குட்டனை, 2021 ஜூனில் கைது செய்தனர். ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, பிரமோத் குட்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
காமுக தந்தை கைது
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது விவசாய கூலி தொழிலாளி. இவர் மே, 22 இரவு, 10:30 மணிக்கு தன், 17 வயது மகளை, தோட்டத்துக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். கரூர் மகளிர் போலீசார், விவசாய கூலி தொழிலாளியை போக்சோவில் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த அனுராவ் என்பவர் மகன் நிஷார் 36. இவர் ஒரு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததால், இவர் மீது கோவை மாநகர், அனைத்து மகளிர் (கிழக்கு) போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, கடந்த 7ம் தேதி கைது செய்து, நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினார். வடக்கு சரக போலீஸ் கமிஷனர் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், நிஷார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
போக்சோவில் வாலிபர் கைது
செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, கடந்தாண்டு கோடை விடுமுறையில், எண்ணுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ், 21, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நரேஷ் ஆசைவார்த்தை கூறி பலமுறை, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.கடந்த மாதம் கோடை விடுமுறைக்கு எண்ணுார் சென்றபோதும், பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், அம்பத்துார் மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நரேஷை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.