ADDED : ஜன 16, 2024 11:52 PM
திருச்சி : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை பிரிவு ஜி-கார்னர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கடந்த 11ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை, ஐ.ஐ.டி.,யின் சிவில் இன்ஜி., துறை கட்டமைப்பு பொறியியல் பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி, பாலத்தை ஆய்வு செய்தார்.
பாலம் கட்டுமான பணிகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் அறிவுரைப்படி, பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் அருகே, பாலத்தின் சேதமடைந்த பகுதியில் வலுப்படுத்தும் பணிகளை நேற்று துவங்கினர்.
மேலும், பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை வலுப்படுத்த மணல் நிரப்பும் முறை மாற்றியமைக்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறையாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நவீன இயந்திரங்கள், கட்டுமான பொருட்களை திரட்டி, பழுது சீரமைக்கும் பணிகளை துவங்கி உள்ளது. பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி தலைமையில், நேற்று பூமி பூஜை செய்யப்பட்டு, கட்டுமான பணிகளை துவக்கினர். ஒரு மாதத்திற்குள் பணியை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

