பெண் நிர்வாகி மீது தாக்குதல் அமரை பிடிக்க இரு தனிப்படை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் அமரை பிடிக்க இரு தனிப்படை
ADDED : ஜன 26, 2024 02:02 AM
கோட்டூர்புரம்:பிரதமர் வருகைக்கு ஆட்களை திரட்டுவதற்காக வாங்கிய பணத்தில் பங்கு கேட்டு, பா.ஜ., பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க, இரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்த தேவி என்பவர் வீட்டில், அவரது தங்கை ஆண்டாள், 43, வசிக்கிறார். இவர், பா.ஜ., மாவட்ட துணை அமைப்பாளர். இரு நாட்களுக்கு முன், தேவி வீட்டுக்குள் நுழைந்த நபர்கள், ஆண்டாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'பிரதமர் வருகைக்கு ஆட்களை திரட்டுவதாகக் கூறி 50,000 ரூபாய் வாங்கினாய். அப்பணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்' என, அந்நபர்கள் கேட்டதாக தெரிகிறது. பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்நபர்கள், ஆண்டாள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேவி, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, பா.ஜ., சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவர் ஸ்ரீதர், 43, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, நிர்வாகிகள் கஸ்துாரி, நிவேதா உட்பட ஆறு பேர் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க, உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

