விழுப்புரம், குடந்தை பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இயக்கம்
விழுப்புரம், குடந்தை பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இயக்கம்
ADDED : ஜன 26, 2024 01:47 AM
சென்னை:போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து, 90 சதவீதம் ஆம்னி பஸ்களை இயக்கிய உரிமையாளர்களுக்கு நன்றி.
முதல் நாள் என்பதால், சில சங்கங்களின் பஸ்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படவில்லை. வரும் காலங்களில், அவர்களும் இங்கிருந்து பஸ்களை இயக்குவர். கூடுதல் வசதிகள் செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியரை, ஆம்னி பஸ்கள் இறக்கி விடக் கூடாது.
கோயம்பேடு பஸ் நிலையம், இனி ஆம்னி பஸ்களின் பயன்பாட்டுக்கு கிடையாது. ஆம்னி பஸ் பயணியர் பயன்பாட்டுக்கென 1,400, 'ப்ரீபெய்டு' ஆட்டோக்கள், 200 கால்டாக்சிகள், 300 பெருநிறுவன வாடகை வாகனங்கள் இயக்கப்படும்.
தற்போது கூட, 300 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முடிச்சூரில் ஆம்னி பஸ்களை நிறுத்தும் வசதி, மார்ச் இறுதிக்குள் செய்து தரப்படும். கோயம்பேட்டில் 5,000 சதுர அடி வழங்கப்பட்ட நிலையில், இங்கு 7,000 சதுர அடி இடம் வழங்கப்பட்டுள்ளது.
பயணியருக்கும் கோயம்பேட்டை விட, கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் உள்ளன. இங்கு இருந்து கோயம்பேட்டுக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ், தாம்பரத்துக்கு, 10 நிமிடத்துக்கு ஒரு இடைநில்லா பஸ், சிறுசேரியில் இருந்து கூடுதல் பஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டுக்கு வரத் துவங்கி விட்டது. விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட, இதர போக்குவரத்துக் கழக பஸ்களும், வரும் 30ம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
சில பஸ்கள் மட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, உத்திரமேரூர், திண்டிவனம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி வழியாக பெங்களூரு, வேலுார் செல்லும் பஸ்களும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

